Friday, December 10, 2010

கற்பனைக் காதலருக்கு பிறந்த நாள் வாழ்த்து..!

   இன்று நம் நண்பர் ப்ரியமுடன் வசந்த்துக்கு பிறந்தநாள்.. மகாகவி பாரதியார் பிறந்த நாள்லயே பிறந்திருக்கார் பாருங்க அதான் கவிதை எழுதறார் போல...
(வடிவமைப்பு: பதிவுலகில் பாபு)
 கற்பனைக் காதலரைக் கவிதையாலேயே வாழ்த்துனா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு... இதோ அவருக்காக நான் எழுதிய கவிதை.....

(வடிவமைப்பு: பதிவுலகில் பாபு)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!  

 பிரியமுடன்

இன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


- மகாகவி பாரதியார். 

பின்குறிப்பு: நாளை பாரதியார் பிறந்த நாள். அதனால் அவர் நினைவாக மகாகவி பாரதியார் கவிதைகளில் எனக்குப் பிடித்ததில் ஒன்று.


Wednesday, December 8, 2010

இரத்தத்தில் கலந்தவள் - சிறுகதை

ஃபோரத்தில் (பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று) இருந்து வெளியே வந்தனர் நவீனும், அரவிந்தும்.

"இதெல்லாம் நம்மளுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை மச்சி" என்றான் நவீன்.

"இல்லை.. தெரியலைடா" இது அரவிந்த்.

"ஆமாம் அதெல்லாம் தெரிஞ்சுருந்தாதான் நாம எப்பவோ முன்னேறி இருப்பமே."

"ஸ்டுபிட் இப்ப என்ன கெட்டுப் போயிட்டம்னு புலம்ப ஆரம்பிக்கற.. நிறுத்துடா"

நின்றான்....

என்னடாது நாம இவன நிறுத்துடான்னா இன்னொருத்தன் நம்ம முன்னாடி நிக்கறானே என்று நிமிர்ந்து பார்த்தான் அரவிந்த்.

"ஏய் மச்சி நீ இந்த ஊர்லதான் இருக்கியாடா? என்னடா ஷாப்பிங்கா? எப்படி இருக்க?" என்று விடை தேவைப்படாத கேள்விகளாகவே கேட்டான் அவனது கல்லூரி (கால) நண்பன் ராஜூ. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்குமே எந்த ஆச்சரிய உணர்ச்சியும் இல்லை.

"ம் நீயா.. நீயும் இந்த ஊர்லதான் இருக்கியா? நான் நல்லாருக்கேண்டா. ஷாப்பிங்லாம் ஒன்னும் இல்லடா. இவன் என்னோட ஃபிரண்டு. உச்சா போகனும்னான் அதான் ஃபோரம்ல இருக்கற டாய்லட் போயி போயிட்டு வந்தோம்"

அவன் அதிர்ந்தவனாய் இதெல்லாம் ஒரு பொழப்பாடா என்பது மாதிரி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" -அரவிந்த்.

அவனது நண்பன் மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

"சரிடா நான் கிளம்பரேன். எனக்கு வேலை இருக்கு" என்று சொன்னவாரே பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.

"எப்படி எஸ் ஆயிட்டான் பார்த்தியா.. எப்படிடா நம்மள பாத்தவுடனே இவனுங்களுக்கெல்லாம் புரிஞ்சுடுது. ஒதுங்கி ஓடிப்போயிடறானுங்க. வேஸ்ட் ஃபெல்லோஸ்" என்றவாரே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

சிறிது தூரம் நடந்து இருவரும் அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தனர்.
வெளிச்சம் அதிகம் நுழையாதவாறு, ஆங்காங்கே வர்ண விளக்குகளின் ஜாலத்தில் குடிமகன்களால் நிரம்பியிருந்தது அந்த பார். பாரின் இருபுறமும் எல்.சி.டி டிஸ்பிளே தொலைக்காட்சிப் பெட்டியை சுவற்றில் பதித்திருந்தனர். அதில் எதோ ஒரு இந்தி நடிகன் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு ஆடிக்கொண்டிருந்தான்.

"என்னடா பொண்ணுங்கள்லாம் வந்திருக்காங்க" - நவீன்.

"ஆமாடா இதுங்கெல்லாம் எங்க உருப்படப் போகுதுங்க. எவன் மாட்டப் போறானோ தெரியலை. மாசா மாசம் இதுங்களுக்கு தண்ணி வாங்கித் தரவே தனியா சம்பாதிக்கனும் அந்த பார்ட்டி. நல்ல வேலை என் ஆளு தங்கம்டா."

"அதையும் உரசிப் பாத்துட்டியா மச்சி"

"ஏய் நோ பேட் தாட்ஸ். அவளைப் பத்தி பேசும் போது இப்படி எல்லாம் பேசுனா எனக்குப் புடிக்காது. ஃபிரண்டுன்னு பாக்க மாட்டேன். கொன்றுவேன்"

"சரி சரி ஓவரா டெம்ப் ஆவதடா.. நாம பார்ல வந்து சும்மாதான் உக்காந்துருக்கோம். இன்னும் ஆர்டர் கூட பண்ணலை அதுக்குள்ள பெனாத்தாதே. ஒரு அரை மணி நேரம் உள்ள போவட்டும்.." என்று சொல்லிவிட்டு சிரித்தான் நவீன்.

இருடா மவனே மாட்டாமயா போயிடப்போற கொஞ்சம் உள்ள போவட்டும் அப்புறம் உன்னை வெச்சிக்கறேன் என்று மனதில் நினைத்தவாறே மெனு கார்டை எடுத்தான்.

"நீயே நீயே.. நானே நீயே.. நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே" என்ற பாடல் ரிங் டோனாக ஒலித்தது.

"ஏய் அம்மா கூப்பிடறாங்கடா.. நான் வெளிய போய் பேசிட்டு வர்ரேன். எனக்கு ஒரு லார்ஜ் சிக்னேச்சர் அப்புறம் உனக்கு என்ன வேனுமோ ஆர்டர் பண்ணு. தோ வந்துடறேன்" என்றவாறே எழுந்து வெளியே சென்றான்.

"ம் சொல்லுங்கம்மா"

"டேய்.. வீட்டுக்கு வர நேரமாகுமாடா"

"ஆமாம்மா இன்னிக்கு வீட்டுக்கு வந்தாதான் வருவேன்மா. ஃபிரண்டு ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. நானே போன் பண்ணனும்னு நினைச்சேன். நீங்களே கூப்பிட்டுட்டீங்க"

"ஓ.. சரிடா.. பிரமீ எதோ சேலை சுடிதார்லாம் எடுக்கனும்னா கூட வரச் சொல்றா.. பக்கத்துலதான்.. நான் அவ கூட போயிட்டு வந்திடறேன். சாவி கொடுத்துட்டு போகலாமான்னுதான் கூப்பிட்டேன்"

"இல்லம்மா நீங்க சாவி எடுத்துக்கிட்டே போங்கம்மா. நான் நவீன் ரூம்லயே இருந்துக்கறேன். பாத்து போயிட்டு வாங்க"

"சரிப்பா. நீ பாத்து.. சாப்பிட்டுடு வேலை இருக்குன்னு சாப்பிடாம விட்டுடாத"

"சரிம்மா" இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அரவிந்துக்கு அப்பா இல்லை.. அவனை கஸ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியது அவன் அம்மாதான். அம்மாவின் மீது மிகவும் பாசமாய் இருந்தான்.

அவன் வந்து அமர்வதற்கும் பேரர் ஆர்டர் பண்ணியவற்றைக் கொண்டு வந்து வைக்கவும் சரியாய் இருந்தது.

மீண்டும் அரவிந்தின் மொபைலில் "எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன்...." என்ற பாடல் ஒலித்தது.

"எங்கருந்து மச்சி அழைக்குது உன் ஜீவன்?"

"ஏய் சும்மா இருடா" என்றவாரே காலை அட்டெண்ட் செய்தான்.

"சொல்லுடா செல்லம்." குரல் பம்மியிருந்தது.

"---------"

"இல்லடா எங்க மேனேஜருக்கு இன்னிக்கு பர்த்டே அதான் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்காரு.. அதான் வந்திருக்கேன். அந்த சத்தம்தான் கேக்குது. உங்கிட்ட பிராமிஸ் பண்ணதை மீறுவனா செல்லம். கண்டிப்பா கிளாஸைத் தொட மாட்டேன்" என்றவாரே. சிக்னேச்சர் கிளாஸைத் தொட்டு எடுத்து சத்தம் வராதவாறு மெதுவாக நவீன் கையிலிருக்கும் கிளாசுக்கு சியர்ஸ் வைத்தான்.

"சரிடா செல்லம்.. பார்ட்டி முடிஞ்சதும் நான் மெசெஜ் பன்றேன்."

"----------"

"சரி சரி மறப்பேனா என் இரத்தத்துலயே நீ கலந்திருக்கயே செல்லம். ஐ லவ் யூ" என்றவாரே இணைப்பைத் துண்டித்தான்.

"இரத்தத்துல எல்லாம் அவங்க வந்து எப்படா, எப்படிடா கலந்தாங்க."

"டேய் இன்னிக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கே போல இருக்கு... எனக்கும் ஒரே முடிவுதான்.. அதை ஏற்கனவே சொல்லிட்டேன்.. வீனா எங்கையால சாகாத."

"சரி சரி.. விடு விடு கூல்... இரத்தத்துல கலந்துருக்கறன்னு சொல்றது எல்லாம் ரொம்ப டிராமாத்தனமா இருக்கு மச்சி.. அவ்ளோ லவ் பன்றியா அவங்களை".

"இல்லடா என்னோட பிளட் க்ரூப் AB-. என் பேரு அரவிந்த் அவ பேரு பிருந்தா... பாருடா.. இரத்தத்துலயே நாங்க ரெண்டு பேரும் ஒன்னா கலந்து இருக்கோம் பாத்தியா"

நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான். அதை அரவிந்த் கவனித்து விட்டான்.

"ஏய்.. போடா இதுக்குதான் நான் என் லவ் பத்தி யார்கிட்டயும் சொல்றதில்லை"

"சே..சே.. தப்பா எடுத்துக்காதடா. நீ சொல்லு. எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு. என்னவொரு மேட்ச் பாரு உங்க ரெண்டு பேருக்கும். சரி இவளோ உணர்ச்சிப் பூர்வமா காதலிக்கறவன் ஏண்டா அவங்ககிட்ட பொய் சொல்ற. உண்மைலயே குடிக்காம இருக்க வேண்டியதுதான"

"அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்.. கொஞ்ச நாள்ல நிச்சயம் நிறுத்திடுவேன் மச்சி. ஆனா அது வரைக்கும் என் ஆளு மனசு கஸ்டப்படறதை என்னால தாங்க முடியாதுடா. அவளோட சந்தோசத்துக்காகத்தான் இப்படி அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டியிருக்கு"

மீண்டும் கையை மெல்ல பின்னே கொண்டு செல்ல இருந்த நவீன். அரவிந்த் உஷாராக அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்ததால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"அதுசரி மச்சி... இதுவரை உன் இரத்தத்துல பிருந்தா கலந்திருக்காங்கன்னு சொன்ன. இப்ப தண்ணியடிச்சிட்ட.. ஆல்காஹாலும் இல்ல கலந்திருக்கு"

உடனே அரவிந்தின் முகம் மாறியது. இவன் சொல்வது சரிதானே.. இரத்த வகையில் எழுத்துப் பொறுத்தம் சரியாக இருப்பதையே நினைத்து புழங்காகிதம் அடையும் நான் ஏன் இதுவரை இதை யோசிக்கவில்லை என நினைத்தான்.

அந்த நேரம் மீண்டும் "நீயே நீயே நானே நீயே" ஒலித்தது. எடுத்தான்..

"நான் பிரமீளா பேசறேன்பா.. அம்மாவுக்கு இங்க ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுப்பா. நிறைய பிளட் லாஸ் ஆகிடுச்சு.. AB- ரேர் க்ரூப் கிடைக்காதுங்கறாங்க. எங்கப்பா இருக்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை. சீக்கிரம் வாப்பா"

அம்மாவுக்கு ஆக்சிடெண்டா... அரவிந்தின் உடல் நடுங்கியது... உடனே பதட்டத்துடனும் பயத்துடனும் எழுந்தான்..

"அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்டா உடனே போலாம் வாடா.. நிறைய பிளட் லாசாம் என் க்ருப்தான் அவங்களுக்....."

"ஆல்கஹாலும் இல்ல உன் இரத்துல கலந்திருக்கு" அந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

"அய்யோ" என்று தலையில் கை வைத்தவாரே அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்தான். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது...

"மப்பு ஏத்திக்க வேண்டியது அப்புறம் ஓவர் மப்புல... இடம் பொருள் தெரியாம உக்காந்து எதையாவது நினைச்சு அழ வேண்டியது. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு" என்றவாரே இருவர் அவர்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.

அரவிந்தின் காதில் இப்போது யார் பேசுவதும் விழவில்லை...

"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."

மீண்டும் பாடல் ஒலித்தது.

mother’sday Quotes


Friday, December 3, 2010

கிளாசிக் (2003) - சிக்கு புக்கு - திரை விமர்சனம்

 டைரக்டர் ஜீவாவோட அசிஸ்டண்ட் மணிகண்டன் (இவர் தாம் தூம் படத்தை அவர் இறந்தப்புறம் முடிச்சுக் கொடுத்தவர்) டைரக்ட் பண்ணிருக்கற முதல் படம்..  அப்படிங்கறதாலயும். நம்ம ஆர்யா நடிச்சுருக்காருங்கறதாலயும் படம் எப்படியும் நல்லாருக்கும் அப்படின்னு நம்பி முதல் நாளே இந்தப் படம் போனேன்....

டைட்டில் முடிஞ்சவுடனே 1985 காரைக்குடி.. அப்படின்னு ஸ்லைடு போட்டுட்டு... அங்க நம்ம ஆர்யா ஒரு டைரிய எழுதறதுல இருந்து படம் ஆரம்பிக்குது... அப்புறம் அடுத்த சீன் 2010 லண்டன் அப்படின்னு இன்னொரு ஸ்லைடு அங்கயும் நம்ம ஆர்யா... இப்படி ஆரம்பம் என்னவோ வித்தியாசமாத்தான் இருந்தது... ஆனா படம் பார்க்க ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே புரிஞ்சுடுச்சு... கதை என்னன்னு....

லண்டன்ல இருக்கற ஸ்ரேயா மதுரைக்கும், ஆர்யா காரைக்குடிக்கும் போக வேண்டிய வேலை வருது... ரெண்டு பேருக்கும் ஒரே ஃபிளைட்ல வர்ராங்க அப்படிங்கறதைத் தவிர எந்த சம்பந்தமும் கிடையாது.. ரெண்டு பேரும் பெங்களூர் வந்து அங்கருந்து அவங்கங்க ஊருக்கு ஃபிளைட்ல போறதா பிளான்... ஆனா பெங்களூர் வரைக்கும் வந்த அவங்களால... அங்க நடக்கற ஏர்லைன் ஸ்ட்ரைக்னால அவங்கவங்க ஃபிளைட்ல போக முடியாம... ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டியா நடிச்சு டிரெயின்ல போக வேண்டிய நிலை... அவங்க ஊரு போய் சேர்ரதுக்குள்ள அவங்களுக்குள்ள காதல் வந்திடும்னு நமக்குத் தெரியாதா என்ன.... இதுக்கு நடுவுல ஆர்யா கைல அவங்கப்பாவோட டைரி இருக்கு அதுல அவங்கப்பா (அதுவும் ஆர்யாதான்) அவரோட பழைய காதல் நினைவுகளை எழுதி வெச்சிருக்கார்....

அதைப் படிச்சா எல்லாம் கொரிய மொழில இருக்கு....

என்ன புரியலையா.. மேல படிங்க... இங்க ப்ளூ கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம் மொழிபெயர்ப்பு... சிகப்பு கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம்... கொரியா... (ஆனா ஏன் கொரிய மொழில இல்லைன்னு எல்லாம் கேட்கக் கூடாது)..

அப்பா ஆர்யா போலீஸ் தேர்வுல பாஸாயிட்டு டிரெயினிங் போறதுக்கு முன்னாடி அவரோட தாத்தாவ பாக்க காரைக்குடி பக்கம் இருக்கற அவங்க சொந்த கிராமத்துக்கு போறார்... அங்கதான் நம்ம ஹீரோயின பாக்கறார்.. பிரீத்திகான்னு ஒரு புதுமுகம் நடிச்சிருக்காங்க... பார்த்த உடனே அவங்களை ஆர்யாவுக்கு பிடிச்சிடுது... லவ் பண்ண ஆரம்பிச்சிடறார்... அவங்களும் இவரோட குறும்புத்தனத்தை ரசிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க. காதல் பரிசா அவங்களோட டாலர் வெச்ச செயினை ஆர்யாவுக்கு பரிசா தர்றாங்க...

Joo-Hee படிச்சுட்டு இருக்கப்ப ஒரு சம்மருக்கு அவங்களோட கிராமத்துக்குப் போறாங்க.. அங்க Joon-Ha அப்படின்னு ஒருத்தர சந்திக்கறாங்க.. கிராமத்துல இருக்கும் போது Joo-Hee அங்க ஏரியைத்தாண்டி இருக்கற ஒரு பழைய வீட்டைப் பார்க்க ஆசைப்படறாங்க.. நம்ம Joon-Ha அவங்களோட ஆசைய நிறைவேத்தரார்.. அப்ப நடக்கற நிகழ்வுகள் அவங்களுக்குள்ள ஒரு நெருக்கத்த உண்டாக்கியிருக்கும்.. காதல் பரிசா அவங்களோட டாலர் வெச்ச செயினை ஆர்யாவுக்கு.. அச்சச்சோ இல்லல்ல Joo-Hee க்கு பரிசா தர்றாங்க...



அப்புறம் அவங்க லவ் வீட்டுக்கு தெரிஞ்சு ஆர்யாவோட தாத்தா அவங்க ஸ்டேட்டஸையும், ஜாதியையும் காரணமா வெச்சு இவங்க காதலை ஏற்க மறுக்கிறார். அதனால அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போலாம்னு முடிவு பண்ணிடறாங்க.. ஆனா ஆர்யா அவங்களுக்காக வெயிட் பண்ணி பாத்துட்டு அவங்க வராததால அவரோட போலீஸ் டிரெயினிங்குக்குப் போயிடறார். அங்கயும் அவர்கிட்ட போன்ல பேசறதுக்கு பிரீத்திகா முயற்சி பண்ணினாலும் அவங்க வராத கோவத்துல ஆர்யா பேச மறுத்திடறார்...

அந்த டிரெயினிங்ல கண்ணாடி போட்டுக்கிட்டு (ஒரு டவுட்டு.. போலீஸ் வேலைக்கு கண்ணாடி போட்டவங்களை செலக்ட் பண்ணுவாங்களா... சிரிப்பு போலீஸ்தான் கிளியர் பண்ணனும்) இருக்கற ஒருத்தர் ஆர்யாவுக்கு நண்பராயிடறார்.. அவரும் அவங்க அத்தை பொண்ணை லவ் பண்றதா சொல்றார்.. அவங்களுக்கு லவ் லட்டர்லாம் எழுதி போஸ்ட் பன்றதுக்காக ஆர்யாகிட்ட கொடுக்கிறார். அப்புறம் பிரீத்திகா ஆர்யாவைப் பாக்கறதுக்காக அந்த கேம்புக்கே வந்திடறாங்க.. அப்பதான் தெரியுது.. கண்ணாடி நண்பர் பத்து வயசுல இருந்தே லவ் பண்ணிட்டு இருந்த பொண்ணு நம்ம பிரீத்திகாதான்னு. ஆர்யாவும் அவங்களும் லவ் பண்றது தெரிஞ்சு அந்த கண்ணாடி நண்பர் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்றார். ஆர்யா அவரைக் காப்பாத்தி தன்னோட காதலிய அந்த நண்பருக்கு விட்டுக்கொடுத்திட்டு போயிடறார்...

Joon-Haக்கு ஒரு குளோஷ் பிரண்ட் இருக்கார்.. ரொம்ப நல்லவர்.. அவருக்குத்தான் முதல்லயே Joo-Heeய நிச்சயம் பண்ணியிருப்பாங்க.. ஆனா தன்னோட பிரண்டுக்கும் Joo-Heeக்கும் ஏற்கனவே காதல் இருக்கறத் தெரிஞ்சுக்கற அவர் பொண்ணோட வீட்ல அவரோட பேர யூஸ் பண்ணி ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு ஏற்பாடு செய்வார்.. அப்புறம் நாம இருந்தா அவங்க ரெண்டு பேரும் சேரமுடியாதுன்னு தற்கொலைக்கும் முயற்சி பண்றார்.. ஆனா அவர Joon-Ha காப்பாத்திடறார்.. அப்புறம் Joon-Ha அப்போ நடக்கற வியட்நாம் போருக்குப் போயிடறார்.

அப்புறமென்ன... அப்பா ஆர்யாவோட ஃபிளாஷ்பேக்குக்கும் ஷ்ரேயாவுக்கும் அவங்களுக்கே தெரியாத ஒரு தொடர்பு இருக்கு.. அது என்னங்கறது சஸ்பென்ஸ்..... ஆனா அந்த சஸ்பென்ஸ் படத்துல யார் முகத்துல அதுக்குத் தகுந்த அதிர்ச்சி இல்ல.. அதுக்குத் தகுந்த இசை இல்ல...

2003 ஆம் வருசம் வெளியான கிளாசிக் அப்படிங்கற கொரியப் படத்தை அப்படியே சுட்டிருக்கார் இந்த மணிகண்டன்...

படம் பாக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே... ஆஹா அந்தப் படத்தை நம்ம மொழில பாக்கப் போறோம்னு நினைச்சேன்.. ஃபிளாஸ்பேக்ல வர்ர லவ்.. ரியல்ல வர்ர லவ் ரெண்டுமே நல்லா டச்சிங்கா இருக்கும் கொரியன் மூவில...மொழி புரியாமலேயே அந்தப் படம் பார்க்கும் போது ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது... ஆனா தமிழ்ல.. எரிச்சல்தான் வருது... காபியடிக்கறதுன்னு எல்லா டைரக்டர்ஸும் முடிவு பண்ணிட்டீங்க.. தயவு செஞ்சு அதையாவது ஒழுங்கா பண்ணுங்கப்பா....

சந்தானம் ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஹரிஹரன் சார் பாட்டு பாடறதோட நிறுத்திக்கலாம்... பின்னனி இசை பிரவீன்மணி பண்ணிருக்கார்... முக்கியமான காட்சிகள்ல கூட ரொம்ப மோசமான இசை.. பாடல்களும் ஒன்னும் தேரலை....

மொத்தத்தில் சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்.

Wednesday, December 1, 2010

கண்கள் இரண்டால் - சிறுகதை

"ஏண்டா மச்சி.. ஜாலியா ஒரு நாள் கிளாஸை கட்டடிச்சுட்டு அங்க போய் ஓபி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட இல்லியா" -நண்பன் கோவிந்த்.

"இல்லடா கிளாஸைக் கட்டடிக்கனும்னா எதுக்குடா அங்க போய் உட்காரனும்.. நீட்டா தியேட்டர் போயிட மாட்டேனா. அட்டெண்டண்ட்ஸ் லேக் ஆனாதான் பிராப்ளம் இல்லியே. காசு கட்டினா முடிஞ்சது மேட்டர்"

மீண்டும் தொடர்வேன் என என் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்த்.

"உண்மையிலேயே அந்தப் பசங்களுக்கு உதவி செய்யனும்னுதான் மச்சான் போறேன். இந்த மாதிரி கண் தெரியாத பசங்களுக்கும் இதே பாடமுறை, தேர்வுமுறை வெச்சிருக்கறதே தப்புடா மச்சான். அவங்களால நம்ம அளவுக்கு படிக்க முடியுமா? இல்ல இந்த மாதிரி வேற ஒரு உதவியாளர வெச்சி தேர்வு எழுதினா... அதுல அவங்களோட திறமை எப்படி வெளிப்படும்? அதுவும் நான் அந்தப் பையனுக்கு உதவி செய்யறதா ஒத்துக்கிட்டது கணித பாடத்துக்கு. எனக்கு கணக்கு நல்லா வரும்னு உனக்கே தெரியும். அதான்... நீட்டா அந்தப் பையன கொஞ்ச நேரம் சும்மா உக்காரு தம்பின்னு சொல்லிட்டு. நானே எக்சாம் எழுதிக் கொடுத்திட்டு வரலாம்னு ஐடியாடா"

"என்னவோடா ஒரு கண் தெரியாத பையனுக்கு ஹெல்ப் பண்றங்கற அதனால உன்ன ஓட்ட முடியலை. போய்ட்டு வா. முடிஞ்ச வரை நல்லா ஹெல்ப் பண்ணு. சொதப்பி வெச்சி.. பாஸாக இருந்த பையனை ஃபெயிலாக்கிடாத" என்றான். நான் முறைத்தேன். சிரித்தான்.

"போடா போடா.. சேவை செய்யறவன் கோவிச்சுக்கக் கூடாதுடா" என்றான்.

நான் கல்லூரியில் B.Sc இரண்டாமாண்டு மாணவன். கண் தெரியாத மாணவர்களுக்கு நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, அந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக எதாவது கல்லூரியில் இருந்து மாணவர்களைக் கேட்பார்கள். இந்த வருடம் எங்கள் கல்லூரியிலும் கேட்டார்கள். அதற்குப் போவதாய் ஒத்துக்கொண்டேன் நான். இதோ நாளை அங்கு செல்லப் போகிறேன். கண்ணாமூச்சி விளையாட்டுல கொஞ்ச நேரம் கண் கட்டியிருந்தாலே நமக்கு எப்படா அந்தத் துணியை அவிழ்ப்போம்னு ஆயிடுது.. ஆயுள் முழுக்க கண்கள் கட்டப்பட்ட அந்த சிறுவனோட நிலைய நினைச்சுப் பாருங்க. பாவம் அந்தக் கண் தெரியாத பையன் என்ன படிச்சிருக்க முடியும். அவனுக்கு உதவி செய்ய நான் ஒத்துக்கொண்டது சரிதானே.

------------------------------------------

அந்த அறையில் தரையில் பத்தடி இடைவெளியில் அனைத்து மாணவர்களையும் அமரச் செய்திருந்தனர். அவர்கள் செய்கைகளைப் பார்க்கும் போதே மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த மாணவர்களில் சிலர் தலையை நேராக வைக்கக் கூட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

என்ன வாழ்க்கைடா இது இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா?

அப்படி ஒருவன் இருந்தால்.. ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சுகளுக்கு இந்த நிலை நேர்ந்திருக்குமா? மனசு கணத்தது...

"சார்.. சார்.."

ஒரு ஆசிரியை என்னை சார் என அழைத்து என் நினைவைக் கலைத்தார்..

ஆ நம்மளயா சார்னு கூப்பிடறாங்க.... ஒரு நிமிசம் தடுமாறினேன்...

"ம் சொல்லுங்க"

"சார் இவன் பேரு ஆறுமுகம். இவனுக்குதான் நீங்க எக்ஸாம் எழுதித் தரணும்." என்று என்னிடம் சொன்னவாறே.

"ஆறுமுகம் சாருக்கு வணக்கம் சொல்லு"

"வணக்கம் சார்"

"வணக்கம்ப்பா சார்னு கூப்பிடாத அண்ணான்னு கூப்பிடு"

"சரிங்கண்ணா" என்றான் சிரித்துக் கொண்டே. அந்த சிரிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. ஏனோ வலித்தது மனது.

"சரிங்க சார் நீங்க அங்க போய் உக்காருங்க. தரைலதான் சார் உக்காந்து எக்ஸாம் எழுதனும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க சார்." என்று என்னிடம் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவனிடம் திரும்பினார்.

"என்ன ஆறுமுகம் எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கிட்டு வந்திட்டியா"

"எடுத்திட்டு வந்திட்டேன் மேடம். நான் ரெடியா இருக்கேன் மேடம்" என்றான்.

அந்தப் பையனைப் பார்க்க பாவமாக இருந்தது. பாவம் இந்தப் பையனுக்கு நாம் நிச்சயம் உதவ வேண்டும். பத்தாம் வகுப்பு கணிதப் புத்தகத்தை இந்த மூன்று நாட்களாக புரட்டி வந்தது நல்லதாய் போயிற்று என நினைத்துக் கொண்டேன்.

தேர்வு நேரம் ஆரம்பித்தது.. அந்தச் சிறுவன் மிகவும் துடிப்பானவனாக இருந்தான்.. தேர்வுக்குத் தேவையான காம்பஸ், பென்சில், பேனா ரப்பர் எல்லாத்தையும் அவன் கைக்கு வசதியான இடத்தில் எடுத்து வைத்தான்.

"தம்பி இருப்பா.. நான் அதெல்லாம் எடுத்துக்கறேன்பா.. நீ ஏன் சிரமப்படறே"

"உட்காந்து செய்யற இந்த வேலையே சிரமமா? என்னன்னா சொல்றீங்க. என்னால பாக்க மட்டும்தான்னா முடியாது. நான் சொல்றத மட்டும் செய்யிங்கன்னா... இல்லன்னா மூனு மணி நேரம் பத்தாது." என்றான்.

பொட்டிலடித்தார் போல் என்னைத் தாக்கியது அவன் கேள்வி.

கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.

"அண்ணா அதுல வலது மூளையில. எல்.ஆறுமுகம்னு என் பேர் எழுதுங்க. அப்புறம். ஆன்ஸர் சீட்ல அதே மாதிரி வலது மூளையில.  என் பெயர், என்னோட ரிஜிஸ்ட்ரேசன் நம்பர், பாடம், தேதி இதெல்லாம்.. அடுத்தடுத்து இருக்கும்" அதை ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிடாம கவனமா ஃபில் பண்ணுங்கண்ணா.."

என்ன இவன் இதையெல்லாம் எனக்கு சொல்லித் தருகிறான் என சற்றே எரிச்சலுற்றேன்.

"அப்புறம் கேள்வித்தாள்ல மேல கணிதவியல்னு போட்ருக்கா. பாத்தீங்களா. அதுக்கு கீழ என்ன இருக்குன்னு படிங்கண்ணா.."

ரொம்ப ஓவரா போறானே. இந்தப் பையன். எதை எதைல்லாம் பாக்க சொல்றான் பார் இந்தப் பையன். என என் ஈகோ அந்தப் பையனைத் திட்டியது.

நான் மெளனமாக கேள்வியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"அண்ணா என்ன பன்றீங்க"

"கேள்வியப் படிச்சிட்டு இருக்கேண்டா"

"அண்ணா... நீங்களே படிக்கறதுல என்ன யூஸ்னா?  எனக்கு படிச்சுக் காமிங்க. அதுக்கு நான் பதில் சொல்றேன். சொல்லச் சொல்ல எழுதுங்க. சுறுசுறுப்பா இருங்கண்ணா. ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க நீங்க. டைம் பத்தாம போயிடும் அப்புறம்"

எனக்கு ஆத்திரம் எல்லை மீறியது. கட்டுப்படுத்திக் கொண்டே அவனுக்கு படித்துக் காட்ட ஆரம்பித்தேன். படிக்க படிக்கவே இதற்கு என்ன பதில் வரும் என யோசிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடிக்கும் முன்பே சட்டென பதில் வந்தது அவனிடம் இருந்து.

அந்த நிமிடம் முதல் முழுமையாக என்னை ஆட்சி செய்தான். என்னால் ஒரு புள்ளியைக் கூட கூடுதலாக அந்த விடைத்தாளில் வைக்க முடியவில்லை. அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வை முடித்தான்.

"சரின்னா இப்ப பேப்பரையெல்லாம்.. ஒழுங்கா ஆர்டர் மாறாம அடுக்குங்கண்ணா.. மாத்திக் கட்டிடாதீங்க.. பாத்து ஜாக்கிரதையா செய்ங்க"

அவன் மொழி புரிய ஆரம்பித்திருந்தது. அதனால் இப்போது கோபம் வரவில்லை.

கண் தெரியும் என்னைவிட அவன் வேகமாக செயல்பட்ட விதம். எனக்குத் தேவை உன் கண்தாண்டா... உன் மூளையில்லை என்பதாய் அவன் நடந்து கொண்ட வேகம் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

நேரத்தை சரியாய் கணக்கிட்டு அவன் செயல்படும் விதம் கண்டு என்னை நினைத்து நானே முதல் முறையாய் வெட்கப்பட்டேன்.

என் அகங்காரம், கண் தெரியாதவன் தானே இவனுக்கு என்ன தெரியப் போகிறது நாம்தான் அவனுக்காக பாஸாக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.

எனக்கு கண் தெரிய ஆரம்பித்தது.

Wednesday, November 24, 2010

தாஜ்மகால் - காதலின் சின்னமா?

காதல் என்றாலே எல்லோருக்கும் நிச்சயம் நினைவுக்கு வரும் ஒரு விசயம் தாஜ்மகால். அதனை காதலின் சின்னமாகவே எல்லோரும் கருதுகிறோம்.

மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நினைவகம். புகைப்படத்தில் பார்க்கும் போதே மிகவும் ரம்மியமாக உணருகிறோம். அதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது.

தாஜ்மகாலை உலக அதிசயங்களில் ஒன்றாக அதன் கட்டடக் கலைக்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனை காதலின் சின்னமாக அறிவித்தது யார்?

ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்திருந்த காதலால் கட்டியது தாஜ்மகால் என்று நாம் எல்லாரும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.
ஷாஜகான் மும்தாஜின் இரண்டாவது கணவர்.

மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாவது மனைவி. இது தவிர பல மனைவிகள் உண்டு.

மும்தாஜ் அவளது 14 ஆவது குழந்தை பிறக்கும் போது இறந்தாள்.

ஷாஜகான் பெண்களுக்கான தேடல் அதிகம் கொண்டவர் அவருடைய அரசவையில் அழகான பெண்களுக்கென்றே ஒரு இடம் வைத்திருந்தார். அங்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது ஆனால் அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி.

தாஜ்மகாலை கட்டி முடித்தவுடன் இதே போன்று இன்னொரு கட்டிடம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு பணிபுரிந்த 22,000 பணியாளர்களின் கைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் கட்டிட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார் ஷாஜகான்.

ஷாஜகான் தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறைதவறிய உறவு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலே சொல்லப்பட்ட விசயங்களில் எங்கு காதல் இருக்கிறது?. இத்தனை பேரை கொடுமைப் படுத்தி கட்டப்பட்ட கல்லறை எப்படி காதலின் சின்னமாகும். உண்மையில் உண்மையான காதல் தனக்கென சின்னமெல்லாம் வைத்து விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அது பலரது மனங்களில் அன்பென்ற பெயரில் அமைதியாய் கிடக்கிறது.
இப்போது சொல்லுங்கள்....

தாஜ்மகால் - காதலின் சின்னமா?

Monday, November 22, 2010

கார்ப்பரேட் இந்தியா..!

 மத்தியில் திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்கக் கூடாது (காங்கிரஸ் கோஷ்டிகளைவிட திமுகவோட குடும்ப கோஷ்டி இப்ப அதிகமாயிடுச்சே) என்பதற்காக அவர்கள் செய்த தகிடு தித்தங்கள். ஆடியோ டேப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. அதனை தெளிவாக தமிழ்படுத்தி உண்மைத்தமிழன் - சரவணன் இந்த இணைப்பில் http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_9136.html எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரிய பதிவுதான். ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அதனால் கொஞ்சம் பொறுமையாக முழுதாகப் படியுங்கள்.
 கீழே நான் குறிப்பிட்டிருக்கும் விசயங்கள் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

1. திமுகவுக்குள் இருக்கும் குடும்பச் சண்டை.
2. குடும்பத்தில் அனைவரும் சென்று கும்மியடிக்கும் அளவு செல்வாக்கு பெற்ற முதல்வர். குடும்ப நலனிற்காக மட்டுமே மத்திய அரசை பயன்படுத்துவது.
3. மத்தியில் உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களே.
4. ஊடகங்கள் (செய்தித்தாள், தொலைக்காட்சி) கைப்பாவையாக செயல்படுவது.
5. இதெல்லாம் பெரிய விசயமே இல்லை என நாம் நினைப்பது.
 

தொலைத் தொடர்புத் துறையில் மொபைல் பேசுவதிலும், இணைய இணைப்புப் பெறுவதிலும் நாம் படும் அல்லல்கள், அடையும் பண இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இந்திய அரசாங்கமே அவர்கள் கையில்.. நாம் ஒன்றும் செய்ய முடியாது.. என்று நன்கு தெரிந்ததால்.. நாம் தெரிந்தே ஏமாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம் இந்தியா மாதிரி ஒரு ஜனநாயக நாடு உலகில் இல்லை என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் நம் இந்தியா ஜனநாயக நாடு அல்ல. இந்தியாவை உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நிச்சயம் அடியில் இருக்கும் கண்ணி வெடி வெடிக்கும் அப்போது அழுவோம். அதுவரை....

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..